நேற்று நடந்த இந்திய-தென்னாபிரிக்கா ஒரு நாள் பந்தயத்தில் (அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு) இந்தியா வென்றே ஆக வேண்டிய சூழல் (as usual) ! என்ன, இம்முறை, இவ்வளவு ஓவர்களில் வென்றாக வேண்டும் என்றோ, இத்தனை ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்றோ extra கவலைகள் இல்லை:)
சமீபத்தில், தொடர்ந்து T-20 கிரிக்கெட் ஆட்டங்களை டிவியில் பார்த்து வருவதால், கண்களில் எரிச்சல் இருந்தாலும், எப்போதும் போல் அடியேன் இரவு 9 மணிக்கு டிவி முன்பு (25 வருட வியாதியான, ஒரு வித எதிர்பார்ப்பு மற்றும் டென்ஷனோடு) ஆஜர் ஆனேன்! டாஸில் வென்ற தோனி, பேட்டிங் செய்ய முடிவெடுத்தது சற்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், ஆடுகளம் (pitch) புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று, இந்தியாவுக்குப் பிடிக்காத பச்சை நிறத்தில் (grassy) காணப்பட்டது ;-) ஆனால், தோனி கூறிய (ரன் இலக்கை துரத்துவதில் உள்ள அழுத்தத்தை சமாளிப்பதை விட ஒரு இலக்கை நிர்ணயிப்பது சாலச் சிறந்தது என்ற) காரணம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே தோன்றியது.
சேவாக், கம்பீர் களமிறங்கினர். எப்போதும் போல், வேகப்பந்து வீச்சாளர் படை ஒன்றுடன் நம்பிக்கையுடன் களமிறங்கியது தெ.ஆ! டர்பன் ஸ்டேடியம், ஆரவாரத்திலும், கொண்டாட்டங்களிலும் களை கட்டியிருந்தது. வர்ணனைக்கு வந்த கவாஸ்கரே சற்று டென்ஷனில் தான் இருந்தார், இந்தியா ஜெயிக்க வேண்டுமே என்று !
நிதானமாக ஆடத் தொடங்கிய இந்தியா 4.4 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியாவுக்கு சனி பிடித்தது! நான்கு பந்துகளில், 3 விக்கெட்டுக்களை (கம்பீர், கார்த்திக், சேவாக்) பறி கொடுத்து, 33-3 என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். ஆடுகளத்தில் நல்ல ஸ்விங் இருப்பது தெளிவாகப் புலப்பட்டது. ரோஹித் சர்மா (யுவராஜ் ஆட முடியாத காரணத்தால் தான் இவர் அணியில் இருந்தார்) களமிறங்கினார். அவரும் உத்தப்பாவும் ஸ்கோரை 10.3 ஓவர்களில், 61க்கு எடுத்துச் சென்றபோது, உத்தப்பா, அடிக்கப் போய், ஸ்மித் பிடித்த அபார கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்தார். (அப்போது எ.அ.பாலா கடுங்கோபத்தில், உத்தப்பாவை திட்டி விட்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்:))
பின்னர் வந்த தோனியும், ரோஹித்தும் மனம் தளராமல் (ஒரு challenging இலக்கை எப்படியாவது நிர்ணயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன்!) ஜோடி சேர்ந்து ஆடி, 9.1 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்தனர். சர்வதேச அனுபவம் இல்லாத ரோஹித், கடினமான ஒரு சூழலில் (33-3) வந்து, பந்து அலைபாயும் ஆடுகளத்தில், மிகச் சிறப்பாக ஆடியதை இங்கே குறிப்பிட வேண்டும். ரோஹித்திடம் நல்ல டெம்பர்மெண்ட்டும், திறமையான ஷாட் செலக்க்ஷனும் காணப்பட்டது. இவர் கடைசிப் பந்தில் அடித்த, வீரமான ஸிக்ஸரால், இந்தியா 150-ஐத் தாண்டி, தெ.ஆவுக்கு 154-ஐ வெற்றி இலக்காக நிர்ணயித்தது!
*****************************************************
பந்து வீச, இந்தியா நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் களமிறங்கியதாகத் தான் எனக்குத் தோன்றியது (இல்லை, பிரமையோ, என்ன இழவோ ?). RP சிங் தனது முதல் ஓவரில், 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி (கார்த்திக், ஸ்மித் கொடுத்த கேட்சை பிடித்தது, பிரில்லியண்ட்!), அடுத்த ஓவரில், ஸ்ரீசாந்த் டிவிலியர்ஸை LBW அவுட்டாக்கியதில், தெ.ஆ 12-3 ! ஆட்டம் சூடு பிடித்தது, என் விருப்பம் போலவே :)
ஜஸ்டின் கெம்பும், பவுச்சரும், தட்டுத் தடுமாறி ஸ்கோரை 30க்கு இட்டு வந்தபோது, நமது பேட்டிங் ஹீரோ ரோஹித்தின் அபார முயற்சியால், கெம்ப் ரன் அவுட் ! தொடர்ந்து, RP சிங் போலக்கை (round the wicket பந்து வீசி) க்ளீன் போல்ட் செய்து பெவிலியனுக்கு அனுப்பியதில், 31-5 ( 5.5 ஓவர்கள்). ஒரே குறை, ஸ்ரீசாந்த்தும், RP சிங்கும் பல wide பந்துகளை வீசியது தான்! இப்போது, மிக லேசாக, இந்திய அணி ரத்த வாடையை உணர்ந்தது ! ஆனால் அந்த வாடையை என் மூக்கு உணர மறுத்தது :)
அதன் பின், பவுச்சர், மார்க்கல் இடையே ஒரு நிதானமான பார்ட்னர்ஷிப் மலர்ந்து, ஸ்கோர் நூறை எட்டியது (16.4 ஓவர்கள்). ஆனால், தேவையான ரன் ரேட் (16.2 ரன்களுக்கு) எகிறியிருந்தது. நடு ஓவர்களின் போது, ரன் ரேட் எகிறியதற்கு முக்கியக் காரணம் இர்பான் பதானின் திறமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார்!). ஜோகிந்தரும் நன்றாகவே பந்து வீசினார். அந்த நிலையில், தெ.ஆ ஒழுங்காக, அரை இறுதிச்சுற்றுத் தகுதிக்குத் தேவையான இலக்கை (126 ரன்கள்) முன் வைத்து ஆடியிருக்க வேண்டும்!
ஆனால் நம் அணியினரோ, தெ.ஆ வை மொத்தமாக வூட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்தனர் போலும்! விதி வேறு சதி செய்தது! ஸ்ரீசாந்த்தின் வெளி செல்லும் பந்தை, ஸ்டம்ப்புக்கு இழுத்து, பவுச்சர் போல்ட்!!! 100-6. இப்போது டிவியில் பார்த்துக் கொண்டிருந்தே எனக்கே தெளிவாக ரத்த வாடை அடித்தது (நான் அதிகமாக national geography, Animal planet சேனல்கள் பார்ப்பதால் இருக்குமோ ?) !
நமது டர்பனேட்டர் ஹர்பஜன், தனது முழுத்திறமையை காட்டி பந்து வீசிக் கொண்டிருந்தார்! 103-இல், பிலாண்டர் ஸ்டம்ப் அவுட் ஆனதில், 103-7. RP சிங்கின் (19வது) ஓவரில், தெ.ஆ வின் கடைசி நம்பிக்கையான மார்க்கலின் ஸ்டம்ப் சிதற அடிக்கப்பட்டதில், 109-8. களத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தெ.ஆ அணியினர் பேயறைந்தது போல் காணப்பட்டனர். தெ.ஆ ரசிகர்கள், நடப்பது கனவா நனவா என்ற நம்பிக்கை இல்லாமல் பேச்சு மூச்சு இன்றி பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்டேடியத்தில் இருந்த டர்பன் வாழ் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆரவாரித்த வண்ணம் இருந்தனர்.
இறுதியாக, (இதுவரை நடந்த எல்லா ஆட்டங்களிலும் வென்ற) தெ.ஆ 20 ஓவர்களில் 116-9 என்ற நிலையில், அரை இறுதிச் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் தோற்றுப் போனது சோகமே! இந்தியா நேற்று டர்பனில் அடித்த கூத்தில், 'பின்புற வாசல்' வழியாக நியூஜிலாந்து அரை இறுதிச்சுற்றில் நுழைந்து விட்டது :) தெ.ஆ வை கலகலக்க வைத்து, மண்ணைக் கவ்வ வைத்ததில், RP சிங்குக்கு பெரும்பங்கு உண்டு (4-0-13-4). இளம் இந்தியா வாழ்க, வளர்க !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 357 ***